நீதிக்கதை!


நீதிக்கதை!

பல நாடுகளைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒரு பேரரசர், அவருக்கு ஆலோசனைகள் கூற பல மந்திரிகள், அரசருக்குப் பணிவிடை செய்ய ஒரு சேவகன். அரசர் தன் சேவகனிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.
அரசர் சேவகனிடம் கொண்ட அன்பை சகிக்காத மந்திரிகள் பொறாமை கொண்டார்கள். அறிவுக்கரிய பல ஆலோசனைகள் கூறும் நம்மிடம் காட்டாத அன்பை, கேவலம் ஒரு சேவகனிடம் அரசர் அன்பைக் காட்டுகிறாரே என்ற எரிச்சல்.

மந்திரிப் பிரதானிகள் இவ்வாறு பொறாமைப்படுவது அரசருக்குத் தெரிய வந்தது. உண்மையை உணர்த்த அரசர் ஒரு திட்டமிட்டார். அறிவிப்பு செய்து தர்பாரைக் கூட்டினார். சபைக்கு மந்திரிகள் அனைவரும் ஆஜராகி இருந்தனர், அரசரின் சிம்மாசனத்துக்கு அருகே மிகவும் விலை உயர்ந்த ஒர் இரத்தினக் கல்லும் - ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த மந்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் இருந்தனர்.

வழமையான மரியாதைகளுடன் வந்து அரசர் தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். என்ன நடக்கப் போகிறது என்ற சபையின் பெருத்த ஆவலுக்கிடையியே அரசர் தமது முதல் மந்திரியை அழைத்தார். அவர் அருகில் வந்ததும் அந்த சுத்தியலை எடுத்து பெரும் மதிப்புள்ள இரத்தினக்கல்லை உடைக்கும்படி கட்டளையிட்டார். மதியூகம் நிறைந்த முதல் மந்திரிக்கு ஒன்றும் புரியவில்லை. விலை உயர்ந்த இருத்தினக்கல்லை உடைக்கும்படி அரசர் ஏன் கட்டளையிடுகிறார்? விலை மதிப்பற்ற இரத்தினக்கல் சுக்கு நூறாக உடைந்து பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமே? அரசருடைய சிந்தனையில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்ற முடிவுடன் இரத்திக்கல்லை உடைக்காமல் திரும்பச் சென்று விட்டார்.

அரசர் அவருக்கு அடுத்த மந்திரியை அழைத்து இரத்தினக்கல்லை உடைக்கக் கட்டளையிட்டார். முதன் மந்திரியே உடைக்கத் துணியாத போது அவர் உடைப்பாரா? அவரும் உடைக்காமல் திரும்பி விட்டார். இப்படி அங்கு சபையிலிருந்த மந்திரிப் பிரதானிகள் எவரும் அந்த இரத்திக்கல்லை உடைக்கத் துணியவில்லை. எல்லோருடைய சிந்தனையிலும் அந்த இரத்திக்கல்லின் பெறுமதி தெரிந்ததே தவிர பேரரசரின் சொல்லின் பெறுமதி தெரியவில்லை.

இறுதியாக அரசர் அந்த சேவகனை அழைத்து இரத்தினக்கல்லை உடைக்கும்படி கட்டளையிட்டார். அரசரின் வாயிலிருந்து கட்டளை பிறந்தவுடன் எவ்வித தயக்கமோ, சலனமோ இல்லாமல் சுத்தியலை எடுத்து இரத்தினக்கல்லை உடைத்து விட்டான். அட முட்டாளே! பெரு மதிப்புள்ள இரத்தினக்கல்லை உடைத்து விட்டாயே? என்று மந்திரிப் பிரதானிகள் கோரஸ் பாடினார்கள். அந்த சேவகனோ பதட்டமில்லாமல் நிதானமாக, நானோ கேவலம் ஒரு இரத்தினக்கல்லைத்தான் உடைத்தேன், நீங்களோ அந்த இரத்தினக்கல்லைப் போல் பல நூறு இரத்திக்கல்லுக்கும், வைர வைடூரியங்களுக்கும், தங்கப் பொக்கிஷங்களுக்கும், பல நாடுகளுக்கும் அதிபதியாகிய பேரரசரின் சொல்லையே உடைத்து விட்டீர்கள். என்று அமைதியாகப் பதில் கூறினான்.

அப்போதுதான் மந்திரிப் பிரதானிகளுக்கு அரசரின் கட்டளையை ஊதாசீனப்படுத்தியது புரிந்தது. அரசர் தங்களை விட அந்த சேவகனை அதிகமாக நேசிக்கும் காரணமும் புரிந்தது.


தொகுப்பு: நெல்லையன்.
thanks pottalpudur.com

கருத்துகள்