எப்பவுமே ஒரே பேச்சுதான்! (mullah stories)


எப்பவுமே ஒரே பேச்சுதான்! (mullah stories)

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் முல்லா அவர்களே தங்களது வயது என்ன? என்று கேட்டார்.

நாற்பது வயது என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே * அது எப்படி? என்று கேட்டார்.

நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.


முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள்,
எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக
குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும்
முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார்.
பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ?
இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா,
அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிரூபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்"
என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன்.
அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா,
" அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு,
இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.
யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?
இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார்.
அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

சட்டி போட்ட குட்டி

ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை
கடனாகக் கேட்டார் முல்லா.

பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க
மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது.
நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச்
சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை
பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக
பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.

அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி
மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை
புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம்
கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை
கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை
கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை
திருப்பிக் கேட்டார் அவர்.

“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை
பிரசவத்தின்போது இறந்துவிட்டது” என்றார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.

‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய்.
பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும்
தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.

‘நண்பரே! பானை கர்ப்பமாகி குட்டி போடும்போது மட்டும் ஆமாம் என்றீர். உங்களிடம் அதன் இரண்டு குட்டிகள் கூட இருக்கிறதே குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு வளர்த்திருக்கவேண்டும் ’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.

முல்லா ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

தளபதியின் சமரசம்!

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.


மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா

அதிர்ஷ்டமான மனிதன்

முல்லா நஸ்ருதீன்
 முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா.

துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா. காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார். ‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.

ரகசியத்தை உளரவேண்டாம்

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது.


இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி  விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ''முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று  நினைத்திருந்தேன்,” என்றார்.


''அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

“ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர்  என்றும், தத்துவஞானி  என்றும் புகழ்கின்றனர். அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?  இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

”உம்மிடம சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.ஆனால்,இந்த ரகசியத்தைக் கூறினால்நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்!” என்றார் முல்லா.

”அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

”கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?”

”சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்’’

 “”எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவது, நான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.

”கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன்,”என்றார் முல்லாவின் நண்பர்.

”நண்பரே! நானும் உங்களைப் போலத்தான்.
ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்ளோ, அப்படித்தான் நானும். கோடி கோடியாகப் பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்குஎந்த சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்,” என்றார் முல்லா.


விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''

முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை.
 முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான்.
 உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு ''சட்டையே ! இந்தா தின்னு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் ''என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?'' என ஏளனமாக கேட்டனர்.
 முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''

நன்றி maslahi .in
சிரிக்கவும் சிந்திக்கவும் ,பிறர் மனம் நோவாமல் சிரிக்க வைக்க வேண்டும்! சிந்திக்கவும் வைக்க வேண்டும்!

கருத்துகள்