திருமணம் பற்றி இஸ்லாம்



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி – 5066.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1905.

2:221.  (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம்செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

2:235. (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

2:237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.

13:38. உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்.

24 : 32. உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய
சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

வலீமா விருந்து :

ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும். நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி),
நூல்: புகாரி - 371, 2893.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும்.
ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி - 5168, 5171, 7421.
நாம் நம்முடைய வழிகாட்டியான நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு திருமணம் செய்வதே ஒரு முஸ்லிமுடைய பண்பாகும்.
நன்றி நல்லுர்ஹமீத் .அல்லாஹ் அவருக்கு கிருபைச் செய்வானாகா...

கருத்துகள்