வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்




வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.



மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?
மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.

நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.
எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.
நன்றி நல்லூர் தஃவ

கருத்துகள்