எனது துஆ ஏற்றுகொள்ளப்படுவதில்லையே !



துஆ என்பது ஒவ்வொரு முஸ்லிமும் தன் அன்றாட வாழ்க்கை விடயங்களில் இரவிலும், பகலிலும் தன்னுடைய இரட்சகனை நினைவு கூர்ந்து வணங்கி வழிபடுவதை குறிக்கிறது. அவனுடைய நாவில் திக்ரு இணைக்கப்பட்டே காணப்படும். இத்துஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் மத்தியில் காணப்படும் மிகப்பெரும் ஊடகமாக காணப்படுகிறது. இதனை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையிலே குறிப்பிடுகின்றான். (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளிப்பேன்….


மேலும் நபியவர்கள் (துஆ என்பது இபாதத்தாகும்) என கூறியுள்ளார்கள். இத்துஆவை இறைவனுடன் இணைத்துக்கொள்ள பல சந்தர்ப்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ளான். அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவனின் அன்பையும், மன்னிப்பையும், திருப்தியையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்ய வேண்டும்.

பல மனிதர்கள் தான் எவ்வளவு தான் துஆ கேட்டாலும் அங்கீகரிக்கப்படுவதில்லையே என கவலை கொள்கிறார்கள். சில நேரம் இறைவனின் மீது அவநம்பிக்கை கொள்ளவும் வாய்ப்புகள் காணப்படும். தன்னுடைய துஆ ஏன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். எந்தவொரு அமலை செய்வதானாலும் (இஹ்லாஸ்) உளத்தூய்மையுடன் செய்ய வேண்டும். நாம் துஆ கேட்கும் போதும் உளத்தூய்மையுடனும் இறையச்சத்துடனும் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்தும் கேட்க வேண்டும். மேலும் ஹராமான விடயங்களில் எமது வாழ்வு கலந்து விடாமல் தவிர்ந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸிலே அவனுடைய உணவு, குடிபானம், ஆடை ஹராமான முறையில் இருக்க எவ்வாறு இரட்சகன் பதிலளிப்பான்? என கூறினார்கள். ஒரு மனிதன் துஆ கேட்டால் அதனை அல்லாஹ் சில போது உடனே நிறைவேற்றுவான். அல்லது அவனுக்கு வர இருக்கும் ஆபத்தை தடுப்பான் அல்லது மறுமையில் நன்மையாக மாற்றிக்கொடுப்பான். இவ்வுலகில் பிரார்த்தனை ஏற்கப்பட்டு சந்தோஷமடையும் மனிதன் மறுமையில் துஆ ஏற்கப்படாமல் வரும் நன்மையை நினைத்து கவலையடைவான். நபி (ஸல்) அவர்கள் (உங்களில் ஒருவர் நான் பிரார்த்தித்தேன் எனக்கு பதில் கிடைக்கவில்லை என அவசரப்படாத வரை துஆ ஏற்றுக்கொள்ளப்படும்)

என கூறினார்கள். அல்லாஹ் துஆவை ஏற்றுக்கொள்ள பல சந்தர்ப்பங்களை தந்தாலும் கீழ் வரும் சந்தர்ப்பங்களில் அவசரமாக துஆ ஏற்றுக்கொள்ளப்படும் முக்கியமாக மனிதன் தினம் செய்யும் நல்லமல்களில் ஒன்றான தொழுகையில் இறைவனுடன் நெருக்கமாக இணைகிறான். அதில் சூறதுல் பாதிஹா ஓதி ஆமீன் சொன்னதன் பின் துஆ அங்கீகரிக்கப்படும். (முஸ்லிம் : 904)

சுஜூதிலிருக்கும் போது, அடியான் அவனுடைய இரட்சகனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் சுஜுதிலிருக்கும் போதாகும். எனவே துஆவை அதிகப்படுத்துங்கள் (மு:1083) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறுதி அத்தஹிய்யாத்தில் ஸலாம் கொடுக்க முன்னர் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும், ஸலாம் கொடுத்ததன் பின் கேட்கும் துஆ, இரவில் ஒரு பகுதியில் எழுந்து கேட்கும் துஆ, மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்காகவும், ஸாலிஹான பிள்ளை தன் பெற்றோருக்காகவும் கேட்கும் துஆ, ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்கு மறைவில் கேட்கும் துஆ, அநியாயம் செய்யப்பட்டவரின் துஆ (அநியாயம் செய்யப்பட்டவரின் துஆ திரையின்றி ஏற்றுக்கொள்ளப்படும். அது பாவியின் துஆவாக இருந்தாலும் சரியே) (அஹ்மத்) என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சோதனைகளின் போது, இக்கட்டான சந்தர்ப்பங்களின் போது கேட்கும் துஆ

சேவல் கூவும் போது (சேவல் கூவும் போது நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் அது மலக்கை கண்டுள்ளது) (மு : 6920) என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வை நினைவு கூரும் மஜ்லிஸ்களில் கேட்கப்படும் துஆ, ஜும்ஆ நாளின் போது கேட்கப்படும் துஆ, நோயின் போது கேட்கும் துஆ.

இவ்வாறான பல அழகிய சந்தர்ப்பங்களுடன் இன்னும் பல சந்தர்ப்பங்களை அவனை நெருங்குவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இறைவனின் நெருக்கத்தையும், திருப்தியையும் பெற்று வாழ முயற்சி செய்வோமாக.



ஜெமீலா அலிகான் (பின்பாஸ்)
பாணந்துறை
source ..dawahworld .com


கருத்துகள்