இருளை நோக்கி சமுதாயம்: தீர்வு என்ன?

இருளை நோக்கி சமுதாயம்: தீர்வு என்ன?





இன்றைய நமது சமுதாயத்தின் நிலைப் பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை. சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கண்ணீர்

வடிக்கும் நிலைதான். தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு பிரச்சினையை தனித்தனியே எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டிருப்போரும் நம்முள் அடக்கம். எதுவுமே செய்ய முடியாது என்ற விரக்தியில் இருப்போரும் நம்முள் அடக்கம்.

சில நாட்களுக்கு முன்னர் துபையில் எனது மகனின் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு முஸ்லீம் மேனேஜ்மெண்ட்டின் கீழ் நடைபெறும் பள்ளிக்கூடம். அங்கு வந்திருந்த பேச்சாளார்களில் ஒருவர்….




“நான் அதிகம் பேச விரும்பவில்லை! ஒரு விசயத்துடன் எனது பேச்சை முடித்துவிடுகிறேன் என்று கூறி ஒரு சம்பவத்தை விவரித்தார்.

ஒரு சிறிய ஹாலில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அதில் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருக்கின்றனர். தீடிரென கரண்ட் கட். லைட் போய்விடுகிறது இருள் சூழ்கிறது..



சிறிது நேரத்தில் ஒரு குரல் “ஆ எனது பையை காணவில்லை திருடன்  திருடன்”  சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் குரல்… “அய்யோ எனது குழந்தையை காணாவில்லை” என்று, அதே நேரத்தில் மற்றொரு குழந்தையின் அழுகுரல், வெறொரு மனிதர் வெளியெ செல்ல நினைத்து எழுந்து இருட்டில் தடுக்கி விழுந்து வேதனையில் குரல் கொடுக்கிறார்…”



கேள்வி: அங்கிருக்கும் நீங்கள் எந்த பிரச்சினையை முதலில் அணுகுவீர்கள்?



கேள்வியை கேட்டுவிட்டு அவரே கூறினார் நீங்கள் எந்த பிரச்சினையையும் அணுக வேண்டாம். முதலில் கரண்ட்டை, வெளிச்சத்தை கொண்டு வர முயலுங்கள். வெளிச்சம் வந்துவிட்டால் பிரச்சினைகள் தாமாக தீர்ந்துவிடும்.



இன்று முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் ஊரும் விதிவிலக்கல்ல! இதனைப் பற்றி விவாதிக்கும் போது ஒருவர் (முஃப்தி ஷர்புத்தீன்) கூறினார் இன்று நமக்கிருக்கும் பிரச்சினைகளில் எது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த காலத்தில் இல்லை? கூறப்போனால் இதனை விட பன்மடங்கு அதிகமாகவே இருந்தது. அவர்கள் கண்ட தீர்வென்ன? ஒவ்வொரு பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகினார்களா? முதலில் பெண் சிசு கொலை ஒழிப்போம், பின்னர் மதுவை ஒழிப்போம், பின்னர் விபச்சாரத்தை ஒழிப்போம் என்றார்களா! இல்லை அற்புதமான இஸ்லாம் என்னும் ஒளியை கொண்டுவந்தார்கள்.  இருள்கள் அகன்றன.  காலங்களிலெல்லாம் மிகச் சிறந்த காலத்தை ஏற்படுத்தினார்கள். மனிதர்களிலெல்லாம் புனிதர்களை உருவாக்கி காட்டினார்கள்.



(ஆனால் இங்கே அந்த மாற்றத்தை கொண்டுவந்த மாமனிதர் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது குணநலன்களில் எப்படி திகழ்ந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். )



மெளலான காஜா மொய்னுத்தீன் கூறியது போன்று இருள் இருள் என்று கூச்சல் போட்டால் இருள் நீங்காது, கூச்சலை நிறுத்திவிட்டு வெளிச்சத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்குங்கள். (பித்அத் பித்அத் என்று கூச்சல் போடாதீர்கள், சுன்னத்தை நிலை நிறுத்துங்கள் பித்அத்துகள் தானாக அகன்று விடும்).



கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்காக நாம் ஏன் அலையவேண்டும்?  தீர்வுக்காக நாம் வேறு எந்த சமுதாயத்தையும் அணுகவேண்டியதில்லை. உலகிற்கே தீர்வை கொடுத்தவர்கள் நாம். நாம் தான் முன்மாதிரி சமுதாயம். வெளிச்சத்தை இழந்ததால் தான் இருளில் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கின்றோம். இஸ்லாம் என்னும் அற்புதமான ஜோதியை திரும்பவும் நமது சமுதாயத்தில் கொண்டுவந்துவிட்டால் இருள் நீங்கி நமது சமுதாயம் மீண்டும் வழிகாட்டும் சமுதாயமாக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.





சமுதாயத்தின் நிகழ்காலம்: வழக்கம் போல் சமுதாயத்தினை பற்றிய கவலைகள் கடல் கடந்து வாழும் ஊர்மக்களுக்குத்தான் அதிகமதிகம். ஊரில் இருப்பவர்களோ துரதிஷ்டவசமாக.  இதையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையில் அல்லது நாங்கள் செய்வதுதான் சரி என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை இயலாதவர்களாக கருதி செயல்படுவது.

இயக்கங்களிடையே ஒற்றுமையாகட்டும், கொள்கைளிடையே ஒற்றுமையாகட்டும், ஜமாத் பிரச்சினைகளாகட்டும். (ஊர் லெவலில்தான், அதே முடியவில்லை பின்னெங்கே மாநில லெவலில்); சமுதாய தொலைநோக்கு நலனுக்காக நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் எந்த பலனையும் தரவில்லை. நாட்கள் செல்ல ஒருவருக்கொருவரிடையே இருக்கும் கசப்புகள் தான் அதிகரித்தன. இருக்கும் தலைமுறையை சரிசெய்வதென்பது விவாதத்தில், விவகாரத்தில் தான் முடியும் என்பது எங்களுக்கேற்பட்ட அனுபவம்.

சமுதாயத்தின் எதிர்காலம்: சமுதாயத்தின் எதிர்காலம் குழந்தைகளின் கையில். இன்றைய நமது குழந்தைகளின் நிலை எப்படியிருக்கின்றது.



இன்று நமது சமுதாயத்தின் தேட்டம் தீனைவிட பொருளாதாரத்தில் தான். சமுதாயம் தீனை விட்டுவிட்டு பொருளாதாரத்தை தேடிக்கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையானதல்ல, ஏனெனில் வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டும் தான் என்ற மாற்று மதத்தினரின் வழையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றது…

ஒவ்வொரு வீட்டிலும் காலை ஆறு, ஏழு மணிக்கெ ஸ்கூலுக்குச் சென்று மாலை வீடு திரும்பி பின்னர் ட்யூசன் மற்றும் டிவி. தூக்கம் மறுநாள் இதேநிலை. குர்ஆன், தொழுகை, தீனை கற்பதற்கு “டைம் இல்லை”

இதே நிலை நீடித்தால் இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் சூரா பாத்திஹா ஓதத் தெரிந்த முஸ்லீம்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? (குர்ஆன் சிறுக சிறுக உயர்த்தப்படும்) இமாமத் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்களா? இமாம்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே பள்ளிவாசல்களில் தொழுகையில் நிற்பது ஒன்று இரண்டு சஃப்கள். இமாம்களே இல்லையெனில் தொழுகை நடக்குமா? பள்ளிவாசல்களின் நிலை என்ன?



ஊர் நாம் வழத்தகுதியான ஊராக இருக்கவேண்டுமானால் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இஸ்லாம் என்னும் ஜோதியை அந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்றவேண்டும். எதிர்கால சமுதாயம் ஒரு முன்மாதிரி சமுதாயமாக மாறவேண்டும். இதனை செயல்படுத்த ஐந்து பேர் கொண்ட ஒரு கமிட்டியை (மக்தப் மதரஸா கமிட்டி) ஏற்படுத்தினோம். இதனுடைய முக்கிய நோக்கம் ஊரில் மக்தப் மதரஸாக்களை (முறையான, முழுமையான பாடதிட்டங்களுடன்) ஏற்படுத்தி எதிர்கால சமுதாயத்தை செம்மைப்படுத்துவது.
நன்றி சகோதரர்
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக......

கருத்துகள்