அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

வேண்டாம் புறம் !


வேண்டாம் புறம் !
பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதிலலை.தனது சகோதர முஸ்லிமின் குறைகளை அம்பலப்படுத்தி சந்திக்கிழுப்பது அச்சபைக்கு சக்கரைப்பொங்கலாக மாறிவிடும். பொதுவாக மாற்றாரின் விவகாரம் என்றால் அது தேனை விட தித்திப்பாகி விடுகின்றது.தேனாவது கொஞ்ச நேரத்தில் திகட்டி விடும்.ஆனால் இது திகட்டாது. இதனால் தான் புறம் பேசுபவரும் புறம் கேட்பவரும் தேன் அருந்துவதைப் போன்று அடுத்தவரின் குறைகளை ரசித்து ருசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக புறம் பேசப்படுபவர் பகைவராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தால் அதை சொல்ல வேண்டியதில்லை.தலையிலிருந்து பெறு விரல் வரை பேசி முடிப்பார்கள். சமூகத்தில் உள்ள அத்தனை மட்டத்தாரும் இதில் புகுந்து விளையாடுகின்றனர்.நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் இந்த நோய் பரவியுள்ளது


மார்க்கத்தில் பிடிப்பும் பற்றும் உள்ள நல்லடியார்களைக்கூட ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்த பாவத்தில் விழச்செய்துள்ளான் என்றால் இது எவ்வளவு பெரிய தீமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்


பொருளாதாரத்தில் ஹராம் ஹலாலைப் பேணி நேர்மையாக நடப்பவர்கள் கற்பொழுக்கத்தில் கண்னும் கருத்துமாய் இருப்பவர்கள் தொழுகை நோன்பு திக்ர் போன்ற இறைவணக்கங்களில் ஆர்வம்முள்ளவர்கள் கூட புறம் எனும் பாவத்தில் இலகுவாக விழுந்து விடுகின்றனர் என்றால் ஷைத்தான் இந்த விடயத்தில் இலகுவாக நல்லவர்களையும் கெடுத்து விடுகின்றான் என்பது தான் இதன் அர்த்தம்.


எனவேதான், புறம் குறித்து சில விடயங்களை  உங்களோடு பகிர்ந்து கொள்வது எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் ஒரு பயனுள்ள  உபதேசமாய் இருக்கும் என நினைக்கின்றேன்

புறம் என்றால் என்ன?


புறம் பேசுவது மார்க்க அடிப்படையில் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றாலும், அடுத்தவரின் குற்றங்குறைகளை எடுத்துச் சொல்வது புறம் எனும் பட்டியலில் அடங்காது என நினைக்கின்றனர்
. இந்த நல்லெண்ணத்தில் தான்? அதிகமானவர்கள் பிறரின் குறைகளை பேசித்திரிகின்றனர். எனவே, புறம் என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொண்டால் தான், புறம் எனும் கொடிய குற்றத்தை ஒதுக்கி ஓரங்கட்ட முடியும்.


நபி (ஸல்) அவர்கள் புறம் என்றால் என்ன என்பதை இரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரம் தெளிவாகவும் பின்வரும் ஹதீஸில் தெளிவு படுத்துகின்றார்கள்.
'புறம் என்றால் என்ன என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கவர்கள் 'அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவார்கள்' எனக்கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் என்பது) நீர் உன் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் எனக் கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் கூறுவது அவரிடம் இருந்தால், நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டாய், நீர் கூறுவது அவரிடம் இல்;;லையெனில் நீர் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய் எனக்கூறினார்கள்'.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி)
ஆதாரம்    : முஸ்லிம் : 2589
            : அபூ தாவூத்  : 4864


மேலுள்ள நபி மொழியைக் கவனமாக சிந்தித்துப் பார்க்கும் போது, பல விடயங்களை அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
முதலில் புறம் என்றால் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்பதை விளக்குகிறது.அவனோடு தொடர்புபட்ட எக்காரியமாக இருந்தாலும் சரிதான். அவனுடைய உடல் அமைப்பு, குணநலன்கள், அங்க அசைவுகள், பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம், அவன் அணியும் ஆடை அணிகலன்கள், பயன்படுத்தும் பொருட்கள், அவனுடைய மனைவி மக்கள், பெற்றோர்கள், சகோதர-சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அவன் பிறந்த நாடு, வளர்ந்த வீடு, அவன் வசிக்கும் கிராமம், அவன் பேசும் மொழி, அவன் செய்யும் தொழில், அவனுடைய குலம் கோத்திரம், மார்க்க நடத்தை என எது குறித்துப் பேசினாலும் சரிதான். இப்படி புறம் பேசுவதற்கு பல முறைகள் உள்ளன.


அவனுடைய உருவ அமைப்பு, நடவடிக்கைகளைப் பற்றிக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றிலொன்றாகும்.
உதாரணத்துக்கு, 'அவன் நல்ல உயரம் அளந்து பார்க்காமலேயே ஆறடி என்று சொல்லலாம், ஊதினால் போதும் பஞ்சாகப் பறந்து விடுவான், அவனது உடம்பு உடும்பு மாதிரி ஒல்லியானது, அவன் உண்டால் வாரி வளித்து மூக்கு முட்ட விழுங்கி விடுவான், குடித்தால் மிச்சமீதி வைக்காமல் குடித்து விடுவான், படுத்தால் உருண்டு புரண்டு படுப்பான், பூகம்பம் வந்தால் கூட விழித்தெழமாட்டான், அதிகம் பேசமாட்டான், எப்போதாவது தான் வாய் திறப்பான், அவன் மாபெரும் கஞ்சன், அவன் எச்சில் கையால் ஈ கூட விரட்டமாட்டான். அவனிடம் கொடுத்தவர்கள் உண்டே தவிர, வாங்கியவர்கள் கிடையாது' இப்படி ஒருவரைக் குறித்து அவருக்கு விருப்பமில்லாதவற்றைக் கூறுவதுதான் புறம் பேசுதலாகும்.
அதே போன்றுதான் ஒருவன் செய்யும் தொழிலை மையமாக வைத்து காரணப் பெயர்களைச் சூட்டி, பிறரிடம் அவனைப் பற்றி கேலியாகப் பேசுவதும் புறமாகும் உதாரணமாக ஒருவர் கோழி வியாபாரம் செய்தால் கோழியோடு தொடர்பு படுத்தி 'கோழி நாநா' என்று கிண்டலடிப்பதும், ஏளனம் செய்வதும் புறம் எனும் தொற்று நோய்க்குள் அடங்கும். அதே போன்று தான் சபைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி மறைமுகமாக தாக்குவதும் உதாரணமாக அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ்தான உதவி செய்ய வேண்டும் அஸ்தக்பிருல்லாஹ் போன்ற நல்ல வார்தைகளை தவறான அர்த்தத்தில் பயன்படுத்துவது. இது போன்ற வார்தைகள் குறிப்பிட்ட நபரை பாதித்தால் அதுவும் புறம் தான் என்பதில் எந்த ஐயமுமில்லை
.
புறம் பேசுவதினால் உண்டாகும் தீய விளைவுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்திருந்தாலும் அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்யாமல் விடுவதில்லை. எப்படி உடலில் எங்கேனும் சொறி பிடித்து சொறியும் போது, தோல் சிவந்து, புண் உண்டாகும் எனத்தெரிந்தும் சொறியத் தொடங்கிய பின் கையெடுக்க மனம் இல்லாமல் லயிக்கத் தோன்றுமோ, அது போலவே புறம் பேசலின் பின்விளைவுகளை அறிந்திருந்தும் யாராவது பேசத்தொடங்கினால் ஒரு கை பார்த்துத் விட்டுத்தான் பேச்சை முடிப்பார்கள்.

புறம் பேசுபவர் பிணம் தின்னும் கழுகுக்கு நிகரானவர்


புறம் இஸ்லாத்தில் செத்த பிணத்தைப் புசிப்பதை விடவும் அருவறுத்தக்க இழி செயலாக கருதப்படுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களின் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள், நிச்சயமாக சில ஊகங்கள் பாவமாகும். (பிறரின் குறைகளைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவறைப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். (அல்லவா?) எனவே அல்லாஹ்வை (அதிகம்) அஞ்சுங்கள். நிச்சயமாக இறைவன் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.'
அல் குர்ஆன் : 49: 12
.
இறைவன் இந்த வசனத்தில்; 1- ஊகம்- 2- துருவித் துருவி ஆராய்தல்- 3- புறம் ஆகிய மூன்று பாவங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டுக் காட்டுகின்றான்.


ஒரு செய்தி காதுக்கு எட்டியவுடன் மனித உள்ளத்தில் ஷைத்தான் முதலில் ஊகத்தை தான்; உண்டு பன்னுவான்.அப்படி இருக்குமோ - இப்படி இருக்குமோ–நடக்க வாய்ப்புள்ளது– என்று முதலில் கற்பனையை ஓட விட்டு பின்னர் ஊகத்தை நிறூபிக்க துருவித் துருவி ஆராய்தல் எனும் தேடுதல் வேட்டையில் இறங்கி விடுவான். எஸ்-எம்-எஸ் -ஈ.மெயில்- மொபைல் என நவீன வசதிகள் அத்தனையையும் இதற்காக பயன்படுத்துவான். முடிவில் புறம் எனும் விஷத்தை அறுந்தி தன் உயிரயே மாய்த்துக் கொள்கின்றான் மனிதன்

நீங்கள் ஒருவருக்கொருவர் புறம் பேசாதீர்கள்'எனும் கட்டளையை இறைவன் குறிப்பிடும் போது இறந்து விட்ட தனது சகோதரனின் மாமிசத்தை உங்களில் எவரேனும் சாப்பிட விரும்புவாரா? என வெறுப்புக்கலந்த பாணியில் கேட்கின்றான். புறம் எனும் கெட்ட குணம் செத்த பிணத்தைப் புசிப்பதற்கு இணையானது என்பது இவ்வசனத்தின் சாரமாகும்.
மனித மாமிசத்தைச் சாப்பிட எங்களில் யாராவது முன்வருவோமா? கூச்ச நாச்ச முள்ள யாரும் முன் வரமாட்டோம். பசி தாங்க முடியாமல் உயிரே பிரிகின்ற இறுதி எல்லைக்குள் வந்தால் கூட மனித மாமிசத்தை யாராவது சாப்பிட்டு உயிரைத்தக்கவைத்துக் கொள்வோம் எனக் கற்பனை கூட பண்ணமாட்டோம். காரணம் மனித மாமிசத்தை புசிப்பது நாகரீகமற்றது, அநாகரீகமானது, பலிக்கத்தக்கது, இழிக்கத்தக்கது என்பதை விளங்கிக் கொள்கின்றோம். அதேபோன்றுதான் இறைவனின் பார்வையில் புறமும் அருவறுக்கத்தக்கது, நல்லறங்களைப் பாழாக்கக்கூடியது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தன் சகோதரனின் மாமிசத்தை புசிப்பதை வெறுப்பதைப் போன்று  தன் சகோதர முஸலிமை புறம் பேசுவதையும் வெறுக்க வேண்டும் என திருமறைக் குர்ஆன் எச்சரிக்கின்றது.


புறம் பேசுவது தீயவர்களின் பண்பு


உண்மை இறை விசுவாசிகள் இந்த ஈனச்செயலில் ஈடுபட மாட்டார்கள் மறுமை நம்பிக்கையில் குறைவுள்ளவர்கள் தான் இது போன்ற தீமைகளில் ஈடுபடுவார்கள்.இதை பின்வரும் நபி மொழி உணர்த்துகின்றது
'உள்ளத்தால் அல்லாது நாவால்; ஈமான் கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். அவர்களது குறைகளை ஆராயாதீர்கள். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடித் திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் தொடர ஆரம்பிக்கின்றானோ, அவர்கள் தங்களது வீட்டுக்குள் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி இழிவுபடுத்திவிடுவான்' என நபி  குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூபர்த்துல் அஸ்லமி (ரழி)                 
ஆதாரம் :அபூதாவூத் 4880
அஹ்மத் 20014
செத்த பிணமும் கெட்ட குணமும்


இந்த நபி மொழியைக் கவனமாகப் படிக்கின்ற எந்த முஃமினும் புறம் எனும் ஈனச்செயலில் ஈடுபடமாட்டார்.
அல்லாஹ்வின் நல்லடியார்களை பற்றி புறம் பேசுபர்களுக்கு ஏற்படும் கெதியை பின்வரும் நபி மொழி உணர்த்துகின்றது.
நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு இறந்த மாமிசத்தின் வாடை எங்களுக்கு வீசியது.அப்போது நபிகளார் இது என்ன வாடை என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக்கேட்டு விட்டு இது தான் மூஃமின்களைப்பற்றி புறம் பேசித்திரிந்த (பாவிகளின்) வாடை எனக்குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர்      (ரழி)                 
                               ஆதாரம் : அஹ்மத்  14826     


குறிப்பு :ஹதீஸ் கலை அறிஞர் சுஅய்ப் அல் அர்னாவூத் இதை ஹஸன் எனும் தரத்ததில் உள்ளது எனக்குறிப்பிடுகின்றார்.
மறுமை நாளில் படுபயங்கர வேதனைக்கு அஞ்சி இந்த மோசமான செயலை கனவில் கூட நாம் எண்ணி பார்க்ககூடாது


புறம் கடல் நீரையும் மாற்ற வல்லது.


புறம் பேசுவது எவ்வளவு பெரிய பாரதூரமான குற்றம் என்பதை பின்வரும் நபி மொழி உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு இவ்வாறுள்ள உங்கள் மனைவி சபிய்யா உங்களுக்குப் போதும் என்று கூறினேன்.சபிய்யா குள்ளமானவர் என ஆயிஷா (ரலி) கூறியிருக்கலாம்.உடனே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே நீ ஒரு மிகப்பெரிய சொல்லை கூறி விட்;டாய் அந்தச் சொல் கடல் நீருடன் கலந்தால் கலந்து விடும்எனக்குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
ஆதாரம் : அபூதாவூத் 4877


பொதுவாக உப்பு நீர் மாமிசங்களின் வாடை மற்றும் சுவையை மாற்றத்தான் உபயோகிக்கப்படுகின்றது. அந்த கடலிலுள்ள உப்பு ருசியை இந்த குள்ளமானவர் என்ற சாதாரன வார்த்தை மாற்றி விடும் அளவுக்கு காற முள்ளது என்றால் நாம் நமது சகோதரன் விடயத்தில் பேசும் வார்த்தைகளை கடலில் போட்டால் பூகம்பம் வந்து விடுமோ என எண்னத் தொன்றுகின்றது


புறம் பகைமையை விளைவிக்கும்  குற்றம்


நபிகளாரின் துனைவி ஜைனப் (ரலி) அவர்கள் தனது சக தோழியும் நபிகளாரின் மனைவியுமான சபி;ய்யா (ரலி) அவர்களை யூதப் பெண் என வர்னித்தார்கள்.இதை அறிந்த நபிகளார் ஜைனப் (ரலி) அவர்களோடு கோபித்து துல் ஹஜ் முஹர்ரம் மாதத்திலும் ஸபர் மாதத்தில் சில நாட்களும் அவர்களை வேறுத்து ஒதுக்கி வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
ஆதாரம் : அபூதாவூத் 4604
புறம் வட்டிக்கு நிகரான குற்றம்


வட்டிக்கு 72 வாயல்கள் உள்ளன.அவற்றில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது தன் தாயோடு புணர்வதாகும்.வட்டியில் மிகவும் பயங்கரமானது ஒரு சகோதர முஸ்லிமின் மானத்தில் கை வைப்பதாகும். என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
ஆதாரம் : தபரானி அல் அவ்சத் 7151


வட்டிக்கும் புறத்திக்கும் என்ன தொடர்பு? என்று சிலருக்குத் தோன்றலாம் வட்டி தன் சகோதர முஸ்லிமின் சொத்தை முழங்கி ஏற்பமிடுவதாகும் புறம் தன் சசோதர முஸ்லிமின் மாமிசத்தை முழங்கி ஏற்பமிடுவதாகும்

புறம் மண்ணறை வாழ்வை கெடுக்கும் பெரும் பாவம்.


சில பாவங்களுக்கு இறைவன் மறுமையில் தான் அதற்குறிய தன்டனையைக் கொடுப்பான் ஆனால் புறம் பேசி முஸ்லிம்களின் மானத்தில் கைவைப்பவர்களுக்கு கப்று வாழ்க்கையில் இருந்தே தண்டனையை ஆறம்பித்து விடுகின்றான். இதை பின்வரும் நபி மொழி உணர்த்துகின்றது.


வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோதுஇ இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர் எனக் கூறிவிட்டுஇ ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள்இ அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? என்று கேட்டதும்இ இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: புஹாரி 1361


புறம் அமல்களை அழிக்கும் கிருமி


தீர்க்கமான அறிவின்றி அரைகுறைத் தகவல்களை வைத்து பிறரின் குறைகளை விரைவாக மக்களிடம் பரப்பி, பிறரின் கண்ணியத்தை கலங்கப்படுத்துபவர்கள் எவ்வளவு பெரிய வன் குற்றத்தைப் புரிகின்றனர் என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
'ஒரு தடவை நபி  அவர்கள் 'வங்குரோத்துக்காரன் யார்?' என வினவினார்கள். 'எங்களில் பணம் மற்றும் பொருள் வசதி இல்லாதவனே வங்குரோத்துக்காரன்' என (நபித்தோழர்கள்) பதிலளித்தார்கள். அப்போது, நபி  'உண்மையான வங்குரோத்துக்காரன் யாரெனில், மறுமையில் உலகில் நிறைவேற்றிய தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற (உலகில் புரிந்த) வணக்கங்களை ஒருவன் கொண்டு வருவான். அத்துடன், அவன் (உலகில் வாழும்போது) எவரையாவது ஏசியிருப்பான், எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பான், எவருடைய பொருளையாவது அநியாயமாக சாப்பிட்டிருப்பான், எவரையாவது அநியாயமாகக் கொன்றிருப்பான், எவரையாவது அடித்திருப்பான். ஆகவே, (இவனால்) அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு இவனுடைய நன்மைகளிலிருந்து வழங்கப்பட்டு, இவனது நன்மைகள் யாவும் முடிவடைந்த பின்பும் அநீதியிழைக்கப்பட்டோர் இருந்தால், அவர்களது குற்றங்களிலிருந்து இவனுக்கு வழங்கப்பட்டு, நரகில் தூக்கி எறியப்படுவான்' எனப் பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழி)
                  ஆதாரம் முஸ்லிம் 6744


பெரும்பாலும் புறம் பேசுவோர் தம் எதிரியைப் பழிவாங்கவேண்டும் என்ற வக்கிர குணத்தால்தான் எதிரியின் குறைகளைப் பேசித்திரிகின்றனர். எதிரியைப் பழிவாங்குவதற்காகவே புறம் பேசினாலும், உண்மையில் புறம் பேசுவோர் தம் எதிரிக்கு உதவியே செய்கின்றனர். இவர்களின் இழி செயலின் காரணமாக இறைவன் இவர்களது நல்லறங்களை எதிரிக்கு வழங்கி, எதிரியின் பாவக்கறைகளை இவர்கள் மீது சுமத்துகின்றான்.
தம்மைப் பெற்றெடுத்த பாசமிகு பெற்றோர்கள், தாம் ஈன்றெடுத்த பரிவுமிக்க தம் குழந்தைகள், அன்பு மனைவி, உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் என எவராலும் உதவிக்கரம் நீட்ட முடியாத இக்கட்டான மறுமை நாளில், தாம் கஷ்டப்பட்டு நிறைவேற்றிய நல்லறங்களை, தங்களின் எதிரிக்கு வழங்கி எதிரியின் பாவ மூட்டைகளைச் சுமந்துகொள்கின்ற இப்படிப்பட்ட தியாகச் சீலர்களை (மகா முட்டாள்களை) வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.
எனவே, மறுமை நம்பிக்கையுள்ள நாம், மறுமையில் நிகழவிருக்கும் இதுபோன்ற கெடுதியை உணர்ந்து, புறம் எனும் கொடிய விசக் கிருமியிலிருந்து ஒதுங்கிக்கொள்வோமாக.!


புறம் நரகத்தைப் பெற்றுத் தரும் கொடிய குற்றம்


புறம் பேசுவோர் இத்தீய குணத்திலிருந்து விடைபெற்று முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நபி அவர்கள், தாம் மிஃராஜில் கண்ட காட்சியை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
'நான் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட வேளையில், ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான கூரிய நகங்கள் இருந்தன. அவற்றின் மூலம் தமது முகங்களையும், மார்புகளையும் தாமே கீறிக் கிழித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் யார்? ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்? என ஜிப்ரீல்  அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் 'இவர்கள் தான் மக்களின் மானங்களைப் போக்கி, மனித மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள்'என விளக்கமளித்தார்கள் என நபி  கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : அபூதாவுத் 4878
                           : அஹ்மத் 13372
மறுமையில் இப்பயங்கரத் தண்டனைக்கு அஞ்சி, புறம் எனும் கொடிய குற்றத்திலிருந்து முற்றாக விலகிக் கொள்ளவேண்டும். இந்த நபிமொழியைப் படித்த பின்பும் எவராவது பிறரின் கண்ணியத்தில் அத்துமீறினால், அவர்கள் மறுமை நம்பிக்கையில் குறையுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும்.


கண்டிப்பும் மன்னிப்பும்


மனிதன் மறதிக்கும் தவறுக்கும் இடையில் படைக்கப்பட்டிருக்கின்றான். குறையில்லாத நிறைவான மனிதனை உலகில் காணவே முடியாது. தவறோ, பாவமோ செய்யாதவர்கள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட வானவர்கள் தான். எனவே தான் மனிதனாகப் பிறந்தவன் இப்படித்தான் இருப்பான் என விளங்கிக் கொண்டு, அவனது தவறுகளையும் குற்றங்குறைகளையும் பெரிதுபடுத்தாமால், தவறோடு சம்மந்தப்பட்டவரை தனியாக அணுகி, அவரது தன்மானத்தைப் பாதிக்காத வகையில் அவரது தவறைத் திருத்த முயற்சிக்க வேண்டும். மாற்றமாக அவனது குறைகளை அம்பலப்படுத்தி, நான்கு பேர் சிரித்து அவனை ஏளனம் செய்யும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது.
யார் ஒரு முஃமினுடைய இவ்வுலகத் துயரங்களில் ஒரு துயரத்தை நீக்கிவிடுகிறாரோ அவருக்கு மறுமை நாளின் துயரங்களில் ஒரு துயரத்தை அல்லாஹ் நீக்கிவிடுகிறான். இன்னும், யார் கஷ்டப்படும் ருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவரது விசயங்களை இலகுபடுத்துகிறான். மேலும், யார் ஒரு முஸ்லிமின் (குறையை) மறைக்கிறோரோ அல்லாஹ் அவரின் (குறையை) இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி புரியும் காலமெல்லாம், அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கின்றான். யார் அறிவுப் பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்துக்கான ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான். ஒரு கூட்டத்தினர் இறையில்லங்களில் ஓர் இல்லத்தில் ஒன்று கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, அதைத் தங்களுக்குள் போதித்துக் கொள்வார்களேயானால், அவர்களின் மீது அமைதி இறங்குகிறது. இறையருள் சொரிகின்றது. வானவர் (மலக்கு)கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ் தன்னிடம் உள்ளவர்களிடம் இவர்களைப் பற்றி (உயர்வாகப்) பேசுகிறான். யாரை அவருடைய செயல் பின்னடையச் செய்கின்றதோ, அவருடைய பரம்பரை அவரை முன்னணிக்குக் கொண்டுவர மாட்டாது.'                                 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் :முஸ்லிம்4867

'யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை மறைக்காமல் பகிரங்கப்படுத்துகின்றாரோ, அவரது குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அம்பலப்படுத்தி கேவலப்படுத்துவான்.''வினை விதைத்தவன் வினையறுப்பான் திணை விதைத்தவன் திணையறுப்பான்'என நமது முன்னோர்கள் அனுபவத்தில்தான் சொல்லியிருக்கின்றார்கள்

முக்கிய இரண்டு குற்றங்கள்.


எந்த முஸ்லிமைப் பற்றி புறம் பேசினாலும் பாவம் பாவம் தான் என்றாலும் உலமாக்கல் மற்றும் மரணித்தவர்கள் ஆகியோரைப்பற்றி புறம் பேசுவதை இஸலாம் பாவத்திலும் பெரும் பாவமாக கருதுகின்றது.எனவே அது குறித்தும் இங்கு நோக்குவது அவசியம் என நினைக்கின்றேன்.


மரணித்தவர்களின் மானம் புனிதமானது


உயிரோடு உள்ளவர்களைப் பற்றித்தான் புறம் பேசக்கூடாது.மரணித்தவர்களைப் பற்றி எது வேண்டும் என்றாலும் பேசலாம் என சிலர் நினைக்கின்றனர். என்றோ மரணித்தவர்களைப்பற்றி சபைகளில் ஏலனமாக பேசுவதைப் பார்க்கின்றோம். இஸ்லாம் இதை வண்மையாக தடை செய்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புகாரி 1393


என்றாலும் இஸலாம் இதிலும் ஒரு வரம்பை கட்டியுள்ளது அதாவது வழிகேடர்கள் பொய்யர்கள் இஸலாத்திற்க்கு தவறான வடிவம் கொடுத்தவர்கள் ஆகியோரை பற்றி பேசலாம் விமர்சிக்கலாம் அவர்களின் வழிகெட்ட கொள்கைகளை எச்சரிக்கலாம்.இது தவறல்ல இந்த அடிப்படையில் தான் இப்னு அறபி கஸ்ஸாலி கல்லாஜ் ரூமி பொன்றவர்களின் வழிகெட்ட கொள்கைகளை அறிஞர்கள் விமர்சிக்கின்றனர்.

உலமாக்களும் மனிதர்களே!
உலமாக்களைப்பற்றி புறம் பேசுவது சாதாரன பாமரமக்களைப்பற்றி புறம் பேசுவதைப் போன்றன்று.காரணம் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பும் மறியாதையும் இருக்கும் புறம் பேசப்படும் போது அவர்களின் மதிப்பு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பிக்கும்.அவர்கள் வழங்கும் மார்க்கத்தீர்ப்பும் பலமிழந்து போகும்.அப்போது மடையர்களை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்து விடுவார்கள்.மார்க்க அறிஞர்களும் மனிதர்கள் தான் அவர்களிடமும் தவறுகள் இருக்கவே செய்யும் பகிரங்கமாக ஷிர்க் பித்அத்துக்களை ஆதரிக்காத வரைக்கும் பாவங்களை பகிரங்களாக செய்யாத வரைக்கும் உலமாக்கள் விடயத்தில் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
புறம் பேசப்படும் போது


புறம் மார்க்கத்தில் வன்மையாகக் கடிந்துரைக்கப்பட்ட கொடிய பாவமாகும்.எமது நல்லறங்களை நாசப்படுத்தி, நரகில் தள்ளக்கூடிய பாரிய குற்றமாகும்.கண்ணியத்தைக் களங்கப்படுத்தி, கலவரங்களைத் தூண்டக் கூடிய இழி குணமாகும். எனவே, இவற்றைக் கவனத்திற் கொண்டு, புறம் எனும் கெட்ட குணத்திலிருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.என்றாலும், நம்மிடம் புறம் பேசப்படும் வேளையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
நன்மையை ஏவு தீமையைத் தடு


யாராவது நம்மிடம் புறம் பேசினால், பேசுபவருடன் சேர்ந்து நாமும் ஆமாம் சாமி போட்டு, பேசுபவரை உற்சாகப்படுத்தி, பாவத்திற்குத் துணைபோகாமல் புறம் பேசுபவருக்கு, புறத்தின் விபரீதங்களையும், அதற்கு மறுமையில் வழங்கப்படும் தண்டனைகளையும் எடுத்துரைத்து, அவரைத் திருத்த முயற்சிக்க வேண்டும்.
'நம்பிக்கை கொண்ட ஆண்களும்,பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாவர். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள.;'
                            (அல்குர்ஆன்- 9:71)
'பாவம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள்'
                             (அல்குர்ஆன்- 05:02)
வாதாடு வெற்றி பெறு


நமக்குத் தெரிந்த யார் பற்றியாவது புறம் பேசப்படும்போது, அவரது நல்ல நடத்தைகளை அவ்விடத்தில் எடுத்துக் கூறி, அவருக்குச் சார்பாக வாதாட வேண்டும். அப்போது தான் மறுமையில் வெற்றி பெற முடியும்
'யார் தனது சகோதரனின் கண்ணியம், மற்றும் மானம் மரியாதைக்குக் களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ, அவரது முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்' என நபி  அவர்கள் நவின்றுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரழி)
ஆதாரம்அஹ்மத்:  27576
                            ஷூஅபுல் ஈமான்:  7229


நம்பாதே நம்பாதே


புறம் பேசுபவர் யாரைப் பற்றியாவது சொல்லும் தகவல்களை அவசரப்பட்டு நம்பி விடக்கூடாது.
'கேள்விப்படுவதையெல்லாம் கூறுபவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என நபி அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் : 05
தீர விசாரிப்பதே மெய்


புறம் பேசுபவர் எவரைப் பற்றியாவது சொன்ன தகவல்களை அவசரப்பட்டு நம்பி அதன் பிரகாரம் செயல்பட்டு விடக்கூடாது.
'விசுவாசிகளே! ஃபாஸிக் (தீயவன்) யாராவது உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால,; (அதனைத் தீர விசாரித்து) தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். (இல்லாவிட்டால்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கவலைப்படுபவர்களாக ஆகிவிடுவீர்கள்.'
                            (அல்குர்ஆன் 49:6)


மன்னிப்புக் கேட்போம்


நாங்கள் யாரைப் பற்றியாவது தெரிந்தோ, தெரியாமலோ புறம் பேசியிருந்தால் அவரைத் தனியாக அணுகி உங்களைப் பற்றி நான் இன்னாரிடம் தவறுதலாகப் பேசிவிட்டேன். அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்' எனக் கூறி தமது பணிவையும், அடக்கத்தையும் முழுமையாகத் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரிடம் நடந்ததைக் குறிப்பிடும்போது, பிரச்சினை முற்றி விடும் எனக் கருதினால், யாரிடம் புறம் பேசினோமோ, அவரிடம் தான் அவ்வாறு பேசியது தவறு எனக்கூறி அவரைப் பற்றி புகழ்ந்துரைக்க வேண்டும்.புறம் பேசப்பட்ட நபர் மரணித்திருந்தால் அல்லது சந்திக்க முடியாதளவு தொலை தூரத்திலிருந்தால், இறைவனிடம் அவருக்காகப் பாவமன்னிப்பை வேண்ட வேண்டும்

'மற்றவரின் மானம், அல்லது வேறு பொருள் சம்பந்தமாக ஒருவர் ஏதேனும் அநீதியிழைத்திருந்தால் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் பிரயோசனமளிக்காத நாள் வருவதற்கு முன் மன்னிப்புக்கேட்டு, பரிகாரம் பெற்றுக் கொள்ளவேண்டும். இவரிடம் நல்லறங்கள் இருந்தால் இவர் செய்த அநியாயத்தின் அளவுக்கு இவரிடமிருந்து நல்லறங்கள் பிடுங்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு, இவர் மீது சுமத்தப்படும்.'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
ஆதாரம் : புகாரி 2581


மறப்போம் மன்னிப்போம்


நம்மைப்பற்றி யாராவது யாரிடமாவது புறம் பேசி, பின்னர் தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பது எமது பெருந்தன்மையாகும். நாம் பிறரை மன்னிக்கும்போது, எமது தவறை பிறர் மன்னிப்பார்கள்.
தம்மைக் கொலை செய்ய வந்த எதிரியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) தண்டிக்காது மன்னித்துவிடும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை அமைந்திருந்தது.ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொலைசெய்த வஹ்ஷியையும், கொலைக்குக் காரணமாக இருந்த ஹின்தாவையும் கூட நபியவர்கள் மன்னித்தார்கள். தமக்கெதிராக கிளர்ச்சிகளை மேற்கொள்ள வந்தவர்களிடமும் இரக்கம் காட்டியதற்கு பல சான்றாதாரங்கள் இருக்கின்றன. எனவே, யாராவது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்புக் கேட்டால், அவருடன் முரண்டு பிடிக்காமல், திறந்த மனதுடன் அவரை மன்னித்து நட்பைத் தொடர்வது தான் இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். இதில், நபி (ஸல்) அவர்களிடம் பல முன்மாதிரிகள் இருக்கின்றன.

'ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர். எனவே, அவர்கள் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அதையும் (அவர்களின் குற்றங்குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுள்ளவன.;'
                            (அல்குர்ஆன் 64:14)
('அவர்கள் தவறு செய்திருப்பின்) அதனை மன்னித்து பொருட்படுத்தாமல் விட்டுவிடவும், அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் பிழை (பொறுப்பவன்) மிக மன்னிப்பவன், அன்பு மிக்கவன்.'
                      (அல்குர்ஆன்:24:22)


விலக்கப்படாத புறமும் இழக்கப்படும் நன்மைகளும்.


இது வரை புறம் பேசுவது இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்ட வன் குற்றம் என்பதையும் அதற்கு மறுமையில் கிடைக்கும் இறை தண்டனைகளையும் நாம் அறிந்து கொண்டோம்.
பிறர் வெறுக்கும் காரியங்களை வெளிப்படுத்துவது பெரும் பாவம் என்றாலும் சில வேளைகளில் மாற்றாரின் குற்றங்குறைகளை அம்பலப்படுத்துவதை  மார்க்கம் அனுமதிக்கின்றது.


சம்மந்தப்பட்டவர் அதை வெறுத்தாலும் அதனால் அவர் பாதிப்புக்குள்ளானாலும் சரிதான். இல்லாவிடில் சமுதாயத்தில் பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.பல சமூதாய  நன்மைகளையும் கூட இலக்க வேண்டி வரும். தனி நபர்களின் கன்னியத்தை விட சமூக நலன் பேனப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாம் மிகச் சில சந்தர்பங்களில் தனி நபர்களின் குறைகளை பகிரங்கப்பத்த அனுமதித்துள்ளது. எனவே மார்க்கம் அனுமதித்த அந்த சந்தர்ப்பங்களை பார்ப்போம்.
எச்சரிக்கைக்காக!


சமுதாயத்தில் நன்மக்கள் இருப்பதைப்போல் தீயவர்களும் இருக்கவே செய்வர். கடனை எடுத்து விட்டு ஏமாத்துவோர் அல்லது இழுத்தடிப்போர் திருட்டைத் தொழிலாக செய்வோர் அருள் வாக்கு கூறுவதாக பெண்களின் கற்பை சூறையாடுவோர் என சமூதாயத்தில் பல தீய சக்திகள் இருக்கின்றன. இத்தீய சக்திகளை அடையாளங்காட்டுவது சமூக கடமையாகும். ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த அடிப்படையில்தான்  அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை தங்கள் நூல்களில் பதிந்து வைத்துள்ளனர். அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட விவகாரங்களைக்கூட வெளிப்படுத்தியது பிற்காலத்தவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.இந்த அரும் பணியை இந்த அறிஞர்கள் செய்யாதிருதிருந்தால் நபிகளாரின் சத்திய வாக்கோடு பொய்யர்களின் கருத்துக்களும் ஒன்று சேர்ந்திருக்கும்.


யஃகூப் நபி தன் புதல்வர் யூசுஃப் நபியிடம் தனது சக புதல்வர்களை எச்சரித்த சம்பவத்தை குர்ஆன் குறிப்பிடுகின்றது.
. ''என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி'' என்று அவர் கூறினார்.
நன்றி kaisanriyadi .com
அறிந்து கொள்வோம் இஸ்லாத்தை பற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!