அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

சனி, 17 மே, 2014

தௌஹீத் என்றால் என்ன?


‘நான் உங்களைப்போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே என எனக்கு அறிவிக்கப்படுகின்றது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (18:110)

இஸ்லாமிய மார்க்கத்தில் அடிப்படையானதும் முதன்மையானதுமான ஒரு கொள்கையே ‘தௌஹீத்’ எனும் கொள்கையாகும். ‘தௌஹீத்’ என்றால் ஒருமைப்படுத்துதல், தனித்துவப்படுத்துதல் என்பது இதன் நேரடி அர்த்தமாகும்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய பண்புகளுக்குச் சொந்தக் காரன் அல்லாஹ் ஒருவனே! அவனுக்கு மாத்திரமே வணக்கங்கள் அனைத்தும் செய்யப்படுதல் வேண்டும். அல்லாஹ் அல்லாத யாருக்கும் எந்த வணக்கமும் எப்போதும் செய்யப்பட முடியாது என்பதே அரபு மொழியில் தௌஹீத் என்பதன் சுருக்கமாகும்.
பொதுவாக உலக மனிதர்களில் பெரும்பாலானோர் படைத்த கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், வணக்கங்களைச் செலுத்தும் விடயத்தில் இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையை நாம் கண்கூடாகக் காணு கின்றோம். இந்து சமயத்தில் சுமார் முப்பத்தி மூன்று லட்சம் கடவுள்களை இந்துக்கள் பூஜிப்பதாக மத ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களை நோக்குமிடத்து அவர்கள் அல்லாஹ்வை இரட்சகனாக ஏற்றிருந்தாலும் அதிகமானோர் மகான்களையும், பெரியார்களையும், அவ்லியாக் களையும் சமாதி கட்டி வழிபடும் மோசமான கலாச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வணக்க வழிபாட்டில் அல்லாஹ் அல்லாதவர்களை கூட்டுச் சேர்ப்பது ‘ஷிர்க்’ எனும் இணை வைத்தலாகும். இணை கற்பிப்பது இஸ்லாத்தில் பயங்கரமானதும், கடுமையானதுமான குற்றமாகும். ‘தௌஹீத்’ எனும் இப்பதத்திற்கு எதிர்ப் பதமாக அமையப் பெற்றிருக்கும் இந்த ‘ஷிர்க்கை’ ஒழிப்பதற்கே அனைத்து நபிமார்களும் தங்கள் சமூகத்தாரிடம் தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். அல்லாஹ் திருமறையில்
‘என்னைத் தவிர வணக் கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, என்னையே வணங்குங்கள்!’ என்று வஹி அறிவிக்காமல் எந்தத்தூதரையும் உமக்கு முன்னால் நபியே நாம் அனுப்பியதில்லை (21:25) எனக் கூறுகின்றான்.
உண்மையான இக்கொள்கையை பகிரங்கமாக அவர்கள் முன்வைத்ததாலும் ‘ஷிர்க்கை’எதிர்த்ததாலுமே சொல்லொனாத் துன்பத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இஸ்லாத்தின் உயிர் மூச்சாகக் கருதப்படும் இந்தத் ‘தௌஹீதை’  தெளிவாக திருமறைக் குர்ஆனின் 112வது அத்தியாயம் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘அல்லாஹ் ஒருவன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவன் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை’ (112:1-4).
அல்லாஹ் என்பவன் ஒருவனே! மகான்களோ, பெரியார்களோ, அவ்லியாக்களோ அல்ல. அவர்களுக்கு இறைத் தன்மையும் கிடையாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். மனித பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனையே இஸ்லாம் அறிமுகம் செய்துவைக்கின்றது.
அல்லாஹ் அல்குர்ஆனில் ‘சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’ என்று(முஹம்மதே) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக! (17:111) எனக் கூறுகின்றான்.
வணங்கப்படுவதற்கு அல்லாஹ் மாத்திரமே தகுதியானவன் எனும்போது அவனுக்கு கூட்டுச் சேர்க்கும் அத்தனை நடவடிக்கைகளையும் மாபாதகச் செயல்களாக அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. ‘தௌஹீதைப்’ பற்றி ஆழமாகவும், அழகாகவும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது ‘உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்)அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (2:163).
மற்றுமொரு வசனத்தில் ‘தன்னைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்று அல்லாஹ் உறுதி கூறுகின்றான். வானவர்களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்). அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. மிகைத்தவன், ஞானமிக்கவன். (3:18).
பிரிதொரு வசனத்தில் ‘அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்’ (6:102). எனக் கூறுகின்றது.
எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகிய இந்தத் ‘தௌஹீதை’ முழுமையாக எமது நெஞ்சங்களில் நிறுவி அதனைக் குழிதோண்டிப் புதைக்கும் அத்தனை ‘ஷிர்க்கான’காரியங்களையும் விட்டொழிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!
Thanks..sawaislam.blogspot.com
Allah bless them!