அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

செவ்வாய், 18 ஜூன், 2013

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!

 ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சொந்தமாக ஊரில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் இருந்தன. அளவுக்கடங்காத செல்வமும் இருந்தது. எனினும் அவன் ஏழைகளுக்கு ஏதேனும் உதவி செய்யக்கூட விரும்ப மாட்டான். அனைத்து செல்வத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுபவன்.

அவனுக்கு கமலா என்ற மனைவியும் சீதா என்று பெண்ணும் இருந்தனர். அவர்கள் இருவருமே அவனுடைய குணத்துக்கு நேர்மாறானவர்கள். கமலா, தனக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் பிறருக்கு வழங்க வேண்டும் என்று நினைப்பவள். சீதா சிறுமியாக இருந்தபோதிலும் தனது சக நண்பர்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டால் ஓடோடிச் சென்று உதவும் குணமுடையவள்.
ஒருநாள், சீதாவின் பள்ளியில் படிக்கும் வைத்தியர் பொன்னுசாமியின் மகன் குமாரவேல் வகுப்பிலேயே மயக்கம் பேட்டு விழுந்தான். அவனுக்கு ஏற்கெனவே உடல்நலம் சரியில்லை என்றும் வைத்தியம் செய்வதற்குப் போதிய பணவசதி இல்லாததையும் அவனது தந்தையின் மூலம் சீதா தெரிந்து கொண்டாள்.
அவள் தனது தந்தையிடம் போய், வைத்தியர் மகனுக்கு உதவும்படி வேண்டிக் கேட்டாள். அவனோ, சீதாவைத் திட்டியதோடு மட்டுமன்றி வைத்தியரையும் வீட்டிற்கு அழைத்து, "உனக்கெல்லாம் அறிவே கிடையாதா? சின்னக் குழந்தையிடம் போய் உன் குடும்ப வறுமையைப் பற்றிச் சொல்லியிருக்கிறாயே?' என்று திட்டி அனுப்பினான்.
வைத்தியர் மனம் நொந்து போனார். சீதா, வைத்தியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அழுதாள். அவர், அவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டுத் தனது வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.
ஓராண்டு சென்றது. ஊரில் மழை பெய்யவே இல்லை. பயிர்கள் எல்லாம் பட்டுப் போயின. நிலங்கள் எல்லாம் காய்ந்து தரிசாகப் போயின. அந்த நிலங்களில் இனி எந்தவிதப் பயிரையும் விளைவிக்க முடியாது என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில் அளவுக்கதிகமாக செயற்கை உரங்களைப் பயன்படுத்தியதால் அந்த நிலங்கள் பயனற்றுப் போய்விட்டன என்றும் கூறினர்.
இதைக் கேட்ட செல்வந்தனின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. தன் நிலங்கள் எல்லாம் தரிசாகி விட்டனவே என்று எண்ணி எண்ணி நொந்து போனான். இப்படியே பல நாள்கள் அவன் இருந்ததால் அவனுக்கு நோய் ஏற்பட்டது. அவனிடம் உடல் மெலிந்து கொண்டே போனது.
சீதா பள்ளிக்குச் சென்று வரும்போதெல்லாம் தன் தந்தையை நினைத்து நினைத்து அழுதுகொண்டே வருவாள். இதைக் குமாரவேலின் தந்தை கவனித்து வந்தார்.
ஒருநாள் அவளை வழியில் நிறுத்தி அவளுடைய அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.
தனது தந்தையின் தீராத வியாதியைப் பற்றி அவரிடம் விவரமாக சீதா கூறினாள்.
பதறிப் போன வைத்தியர், தன்னுடைய மருந்துப் பெட்டியை எடுத்துக்கொண்டு, சீதாவின் வீட்டுக்கு ஓடோடி வந்தார்.
தன்னுடைய திறமையையெல்லாம் செலவழித்து செல்வந்தனின் நோயைக் குண்ப்படுத்தினார்,
நன்கு குணம் அடைந்த செல்வந்தன், வைத்தியர் பொன்னுசாமியின் காலில் விழுந்து வணங்கினான்.
"ஐயா, உங்களுக்கு ஒரு துன்பம் வந்தபோது நான் உங்களை விரட்டியடித்தேன்... ஆனால் எனக்கொரு துன்பம் என்று கேள்விப்பட்டவுடன் ஓடோடி வந்து வைத்தியம் செய்தீரே! உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்' என்று கூறியபடி, அவருக்கு நிறையப் பணம் கொடுத்து அனுப்பினான்.
அன்றிலிருந்து அவன் துன்பப்படுகிறவர்களுக்கெல்லாம் உதவும் தயாள குணமுடைய மனிதனாக மாறிப் போனான். ஊர் மக்கள் அனைவரும் அவனைப் புகழ்ந்தனர்.

ஒவ்வொரு மனிதனிடமும் மனிதநேயம் இருக்க வேண்டும்! நற்குணம் வர வேண்டும்! ஒருவர் நமக்கு தீமை செய்தால் ,அவருக்கு நாம் நன்மை மட்டும் செய்ய வேண்டும்! இது தான் நற்குணம் ! உலகத்தில் நற்குணத்தில் சிறந்து விளங்ககூடியவர்  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் . இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான் நற்குணத்தை பற்றி  போதிக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!