அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

செவ்வாய், 2 ஜூலை, 2013

வன்முறைக் கலாசாரமும் வாழ்வியல் வழிகாட்டியின் அறிவுரையும்






முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
இன்றைய செய்தித்தாள்கள் மற்றும் உள்ள ஊடகங்களில் மிக அதிகளவில் வெளிவருகின்ற செய்திகளில் வன்முறைகள் பற்றிய செய்திகளே முதலிடம் வகிக்கின்றன என்ற கூறுகின்ற அளவிற்கு வன்முறை பற்றிய செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்று மனித உயிர்கள் பெறுமதியற்றதாக ஆக்கப்பட்டு மனித நேயம் அற்றவர்களால் காவு கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வன்முறைகளின் காரணமாக அப்பாவி மக்களின் பெறுமதிமிக்க உயிர்கள் பறிக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. இவ்வாறாக கொல்லப்படுவது ஒரு முஸ்லிமாக, கிறிஸ்த்தவனாக, இந்துவாக, பௌத்தனாக யாராக இருந்தாலும் அவனது உயிர் விலைமதிப்பற்றது. வலியும், வேதனையும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.
இத்தகைய மனித குலம் வெறுக்கின்ற வன்முறைக்கலாசாரம் தொடர்பாக கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை மிக உன்னதமான வழிகாட்டலினை வழங்குpன்ற சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு குறித்து நோக்குவோம்.
இஸ்லாம் வன்முறைறைய ஆதரிக்கின்றதா?
அறிவுப்பூர்வமான சத்திய இஸ்லாமிய மார்க்கத்தினை நோக்கி உலக மாந்தர்கள் சாரை சாரையாக அணிதிரள்வதனைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத யூத,கிறிஸ்த்தவ, சியோனிஸவாதிகள் வன்முறைக் கலாசாரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற விரும்புகின்ற இத்தூய கொள்கையினை நோக்கி ‘வன்முறை நிறைந்த மார்க்கம்’ என்கின்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை இன்றைய நவீன வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகையில் உண்மையாகும் என்கின்ற கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் இவ்விஷக் கருத்தை விதைப்பதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். இவ்வாறான விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவதூறை அள்ளி வீசுகின்றவர்களுக்கு இறைமறை பின்வருமாறு ஆணித்தரமாக பதிலளிக்கின்றது.
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32)
வன்முறைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி இட்டு இந்த பூமியில் அமைதியையும், சமாதானத்தையம் நிலைநாட்ட விரும்புகின்ற சத்திய மார்க்கத்தை நோக்கி வன்முறை நிறைந்த மார்க்கம் என்கின்ற அபாண்டான குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் மேலுள்ள அருள்மறை வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
ஒரு தனிமனிதனை கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தினையும் கொலை செய்தவன் போன்றவனாவான் என்ற மிகக் கடுமையான எச்சரிக்கையினூடாக கொலைக் கலாசாரத்திற்கும், வன்முறைக்கும் முற்றுப் புள்ளி இடுகின்றது. மேலும், அருள்மறைக் குர்ஆன் இணைவைத்தலுக்கு அடுத்த படியாக மிகப் பெருங்குற்;றம் மனிதக் கொலையாகும் எனக் குறிப்பிடுகின்றது.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.’ (அல்குர்ஆன் 25:68)
மேலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதே வேளை ஒவ்வொரு சமுதாயத்திலும் சிலர் மனித நேயத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் ஒரு கிறிஸ்த்தவன் வன்முறையில் ஈடுபடும் போது அவன் சார்ந்துள்ள மதத்தினை தொடர்புபடுத்தி கிறிஸ்த்தவ வன்முறையாளன் என்றோ,ஒரு இந்து வன்முறையில் ஈடுபடும் போது இந்து வன்முறையாளன் என்றோ, ஒரு பௌத்தன்  வன்முறையில் ஈடுபடும் போது பௌத்த வன்முறையாளன் என்றோ அழைக்காத இந்த பக்கச்சார்பான ஊடகங்கள் இஸ்லாத்தைப் பற்றி சரிவரப் புரிந்து கொள்ளாத, இஸ்லாமிய சமுதாயத்திலுள்ள ஒருவன் வன்முறையில் ஈடுபட்டு விட்டால் மாத்திரம் அதனை அவன் சார்ந்துள்ள மார்க்கத்தோடு தொடர்புபடுத்துவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
மேலும், பலஸ்தீன், ஆப்கானிஸ்த்தான், ஈராக் போன்ற நாடுகளில் எமது ஈமானிய உறவுகளுக்கு எதிராக கோரமுகம் கெண்ட யூத, கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் கட்டவிழ்து விடும் கெடூரமான வன்முறைத் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்களினால் தினம் தினம் எமது உறவுகள் பச்சிளம் பாலகர்கள் அனுபவிக்கின்ற சோதனைகள், வேதனைகள் மரண ஓலங்களெல்லாம் பூசி மறைக்கப்பட்டு விட்டு ஏதோ பொழுது போக்கிற்காக அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது போன்று ஊடகங்கள் சித்தரிப்பதனையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் வன்முறைக் கலாசாரத்தை மார்க்க அடிப்படையிலும், மனித நேயத்தின் அடிப்படையிலும் எந்தவொரு முஸ்லிமும் அங்கீகரிப்பதில்லை.
இஸ்லாமும் மனித நேயமும்
வன்முறைக் கலாசாரத்திற்கெதிரான மனிதநேயத்தை உலகில் வேறு எந்த மதங்களோ, கொள்கைகளோ போதிக்காத அளவிற்கு சத்திய இஸ்லாமிய மார்க்கம் போதிக்கின்றது. இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32)
எந்த வியாக்கியானங்களோ, விளக்கங்களோ தேவையற்ற அளவிற்கு மிக அழகிய முறையில் மனித நேயம் என்பது பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என்பதனையும் மனித நேயத்தின் அதீத முக்கியத்துவத்தினையும் அழகுற கற்றத் தருகின்றது. மேலும் மனித நேயத்தைப் பற்றி உலகப் பொதுமறை அல்குர்ஆன் குறிப்பிடுகையில் விசுவாசங் கொண்டோர், விசுவாசங் கொள்ளாதோர் எனக் குறிப்பிடாது மனிதர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் இன, மத பேதங்களைக் கடந்து இஸ்லாம் மனித நேயத்தை எந்தளவிற்கு வலியுறுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வன்முறைக் கலாசாரத்திற்கு நேர்எதிரான மனித நேயம் பற்றி தொடர்ந்து உலகப் பொதுமறை அல்குர்ஆன் குறிப்பிடுகையில், (5:2),(5:8),(4:135)
தாருல் அதர் வன்முறைக் கலாசாரத்தை ஆதரிக்கின்றதா?
அருள்மறைக் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மாத்திரம் சட்ட மூலாதாரமாகக் கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை சர்வதேசமெங்கும் மேற்கொண்டு வரும் தாருல் அதர், எமது சமூகத்தில் வழக்கொழிந்து போயுள்ள மனித நேயப் பணிகளான இரத்ததானம், சிரமதானம் போன்ற பல்வேறு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறாக, ஏனையோருக்கு முன்மாதிரியாக மனிதநேயப் பணிகளில் ஈடுபடுவதோடு வன்முறைக் கலாசாரத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற எமது தாருல் அதரை அறியாமையின் காரணமாக சில சகோதரர்கள் வன்முறை சார்ந்த அமைப்பாக நோக்குகின்றனர்.
இவ்வாறாக நோக்குவது அடிப்படையில் தவறு என்றாலும் இவ்வாறு எண்ணுவதற்கு ஏதுவாக அவ்வப்போது சில நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. உதாரணமாக,அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தராத, மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, குனூத், கூட்டுத் துஆ போன்ற நூதன செயற்பாடுகளுக்கு எதிராக தாருல் அதர் மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான  நூதன அனுஷ்டானங்களை அரங்கேற்றுபவர்களுககு எதிராக சிலர் சில நேரங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இதனை அறியாத பொதுமக்களில் சிலர் நூதன அனுஷ்டானங்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை தாருல் அதரே மிகத் தீவரமாக மேற்கொண்டு வருவதனால் இவ்வாறான வன்முறைகளும் தாருல் அதரினாலேயே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.
இவ்வேளையில் இறையச்சத்தினை முன்னிறுத்தி தாருல் அதரின் நிலைப்பாட்டினை  தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
தாருல் அதரினது பிரச்சாரப் பயணத்தில் எவ்வளவெல்லாம் எதிர்ப்புக்கள் மலையெனக் குவிந்த போதிலும் இவ்வாறான ஈனச்செயல்களில் ஒரு போதும் ஈடுபட்டதில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்ககொள்ள விரும்புவதுடன், கருத்து ரீதியான மாற்றத்தினாலேயே தவிர வன்முறைக் கலாசாரத்தினால் ஒரு போதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை தாருல் அதர் தனது கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இதன் பின்னரும் தாருல் அதரினைப் பற்றி இவ்வாறான  அவதூறான பிரச்சாரங்களை யாராவது மேற்கொள்வார்களாயின் அவர்கள் இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும்.
வன்முறைக் கலாசாரமும் முஸ்லிம்களும்
வன்முறைக் கலாசாரத்திற்கெதிரான மனித நேயமிக்க சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டல் இவ்வளவு அழகாக வரையறுக்கப்பட்டிருக்க, இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் அறியாமையின் காரணமாக அல்லது அறிந்தும் இறைகட்டளைகளை உதாசீனப்படுத்திவிட்டு இவ்வன்முறைக் கலாசாரத்தினைக் கையிலெடுக்கின்றனர்.
குறிப்பாக, தேர்தல் காலம் வந்துவிட்டால் மார்க்கத்திற்கு முரணான வகையில் பல்வேறு வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களின் விடயத்தில் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அற்ப உலகாயுத நோக்கங்களுக்காக மாற்றுக் கருத்துள்ள தனது சகோதரனை கொலை செய்யக்கூட இவர்கள் தயங்குவதில்லை.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் திருமறை வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
‘நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான்.அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.’ (அல்குர்ஆன் 04:93)
மனித உயிரின் பெறுமதியைப் பற்றி மிக உயர்வாகப் பேசுகின்ற சத்திய இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக் கலாசாரத்தை, மனிதர்களைத் தாக்குவதை, சித்திரவதை செய்வதை, மிரட்டுவதை இன்னோரன்ன இது போன்ற மனித வாழ்விற்கு பங்கம் விளைவிக்க கூடிய அனைத்து அநாகரீகமான செயற்பாடுகளையும் கைவிடுமாறு கட்டளையிடுகின்றது.
மனித  நேயத்தைப் போதிக்கின்ற இஸ்லாம் வன்முறைக் கலாசாரத்தை கையிலெடுப்பதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
அண்மைக் காலத்தில் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளாத் திராணியற்றவர்களால் நமது சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைக்க கூடிய வகையில், கண்ணிய மிக்க மார்க்க அறிஞர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதைக் காண்கின்றோம்.
இவர்கள் இறைவனைப் பயந்து கொள்வதுடன் இத்தகைய அநாகரீகமான செயற்பாடுகளை இத்துடன் விட்டொழிக்க முன்வர வேண்டும். மேலும், கண்ணிய மிக்க மார்க்க அறிஞர்களைத் தாக்குதல், வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில் ஜும்ஆ மற்றும் உரைகள் நிகழ்த்துதல், ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்ட்ட முடிவுகளினை விஷ்பரூபமாக்கி அதற்கெதிராக பள்ளிவாயல்களில் அறிக்கைகள் வாசிப்பதன் ஊடாக மக்களைத் தூண்ட முனைதல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் நாம் விட்டொழிக்க முன் வர வேண்டும்.
இறுதியாக, வன்முறைக் கலாசாரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற விழும்புகின்ற இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகளை சிரமேற் கொண்டு நாம் அனைவரும் செயற்படுவதுடன்  எமக்குள் ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளுக்கு தடிகளால் தீர்வு காண்பதனை விடுத்து, ஆரோக்கியமான முறையில்  கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொண்டு பிற சமுதாயத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழக் கூடிய வகையில் ஒரு நாகரீகமான சமுதாயம் உருவாவதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள் பாலிப்பானாக!
அல்லாஹ் Dharulather .com அருள் புரிவானகா! ! நன்றி dharulather

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!