அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

சனி, 17 மே, 2014

சத்திரம்

சத்திரம் 


ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.
அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.
"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.
"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.
தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.
"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.
"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.
"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.
"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"உமது தந்தையார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"
"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"
"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!
"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.
"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.
"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.
அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்
கருத்து..  இந்த உலகத்திற்கு  வந்த அனைவரும் ஒரு பயணிப் போன்றுதான்! ஒரு பயனாளி  ஒரு மரத்தின் அருகில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது போன்று. இது புதிய  கருத்தல்ல ! எல்லோரும் அறிந்து கொண்ட ஒரு விடயம்தான்! இருப்பினும்  , மனிதன் ஒரு மறதிக்காரன் ! கொஞ்சம் நினைவூட்டுதல் ... இந்த உலகம்  உன்னை மயக்கிட வேண்டாம். நீரும் மயங்கி விட வேண்டாம்.. ஷைத்தானும் உன்னை மயக்கிட வேண்டாம்.. இந்த துன்யா மீது பற்று வைக்காதே! ஒரு நாள் உன் வாழ்க்கை அற்றுப் போய்விடும்! வந்த நோக்கம் வாழ்வதற்கு அல்ல! இறைவனை வணங்குவதற்கே! வணக்கம் புரிய வாழ்க்கை தேவை ! வாழ்ந்துக் கொண்டே இறைவனை வணங்க வேண்டும்! இறைவனை வணங்கிக் கொண்டே  ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக் காட்ட வேண்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!