அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

புதன், 18 பிப்ரவரி, 2015

வீடு தேடி வரும் வில்லங்கம்...

வீடு தேடி வரும் வில்லங்கம்...
பெண்களே உஷார்... உஷார்!
ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும்
காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே
இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான்.
குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.

இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில்
திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது,
எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும்
நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார்.
தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும்
வசந்தி, தன் பணிக்காலத்தில் சந்தித்த விஷயங்களில் இருந்தே உங்களுக்கு
உஷார் பாடமெடுக்கிறார் இங்கே!
ஸ்டவ், எலெக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் பார்க்க வருகிறார்களா?!
கேஸ் ஸ்டவ் பழுது பார்க்க, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் பார்க்க
என்று சொல்லிக்கொண்டு வருகிற முன்பின் அறியாத நபர்களை, வீட்டுக்குள்
அனுமதிக்காதீர்கள். ஒன்று, சில நூறு ரூபாய் செலவுள்ள வேலைக்கு,
‘ரெண்டாயிரம் ரூபாய் செலவாகும். புது பார்ட்ஸ் வாங்கணும்’ என்று
கறந்துவிடுவார்கள். அல்லது, வீட்டில் யாரும் இல்லாததை தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி கொள்ளை, கொலை, பலாத்காரம் என்று எதுவும் செய்துவிடலாம்.
எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள, உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடமே
இதுபோன்ற வேலைகளைக் கொடுத்து வாங்குங்கள்.
கையில் பணமா?
வங்கி, பேருந்து, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நம் கையில் பணம்
இருப்பதை அறிந்துவிட்டால், கொள்ளையர்கள் அதை அபகரிக்க வழிப்பறி முதல்
கழுத்தறுப்பு வரை எதையும் செய்யத் துணிவார்கள். அதேபோல பயணங்களில்
நகைகளும் அணியாதீர்கள். ஏமாற்றுவதில், ஆசை காட்டி ஏமாற்றுவது என்று ஒரு
வகை இருக்கிறது. அப்படித்தான் ஒரு பெண், கழுத்தில் நகை, கையில்
குழந்தையோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே
வந்த ஒரு பரிதாப (?) ஆசாமி அவரிடம், ‘ஆந்திராவுல இருந்து வர்றேன். கையில
இருந்த காசை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போக வழி தெரியல. இந்த அரை பவுன்
தங்க மோதிரத்தை வேணும்னாலும் வெச்சுக்கிட்டு, 500 ரூபாய் கொடுங்கம்மா
போதும்’ என்று நம்பும்படி ஆசைகாட்ட, அவரும் கொடுத்துவிட்டார். அது
அக்மார்க் கவரிங் மோதிரம் என்று பின்புதான் புரிந்தது அந்த அம்மாவுக்கு!
போனில் சத்தம்போட்டு பேசாதீர்கள்!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான், ஏமாற்றுக்காரர்களுக்கு எளிய
இலக்கு. மளிகைக் கடைக்கு சென்றுவரும் வழியில், தன் வீட்டில் உள்ள
மோட்டார் பழுதடைந்துவிட்டதையும், சரிசெய்ய ஆள் அனுப்பச் சொல்லியும்
அந்தப் பெண் தன் கணவரிடம் போனில் பேசிக்கொண்டே வந்ததை நோட்டம்
விட்டுவிட்டார்கள் அந்தக் கயவர்கள். சில நிமிடங்களில், ‘சார், மோட்டார்
ரிப்பேருக்கு அனுப்பினாரு’ என்று அந்த இருவரும் அவர் வீட்டில் நிற்க,
அந்தப் பெண்ணும் தன் கணவரிடம் உறுதிசெய்துகொள்ளாமல் உள்ளே
விட்டுவிட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, நகை, பணம், வெள்ளி
சாமான்கள் என்று சில நிமிடங்களில் எடுத்துக்கொண்டு, நிதானமாக வீட்டில்
இருந்து வெளியேறிவிட்டனர் இருவரும்.
இது புதுசு!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை வளாகம். அங்கு வந்த ஓர்
இளம்பெண்ணிடம் சென்ற வயதான பெண்மணி, ‘ஏழைக் குடும்பங்கிறதால, என்
பையனுக்கு சலுகைக் கட்டணத்துல இங்க ஆபரேஷன் செஞ்சிருக்காங்கம்மா. இந்த
செயினை போட்டுட்டுப் போனா, என்னை சந்தேகப்படுவாங்க. நான் போய் என்
பையனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன். அதுவரைக்கும் இதை
வெச்சிரும்மா!’ என்று அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் திணித்துள்ளார்.
சிறிது நேரத்தில், அந்தச் செயினையும், இளம்பெண் தன் கணவரின் மருத்துவச்
செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கும்பல்.
தீவிர விசாரணைக்குப் பின், அந்த வயதான அம்மாவுடன் சேர்ந்து ஒரு கும்பல்
இதை அரங்கேற்றியது தெரிந்தது. மயக்கம் ஏற்படுத்தும் மருந்தில் அந்த
நகையைத் தோய்த்துக் கொடுத்திருக்கிறார். இதனால், கையில் செயினை
வாங்கியதும் இளம்பெண்ணின் கையில் மருந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
எதேச்சையாக கையை மூக்குக்குக் கொண்டு செல்ல, சில நிமிடங்களில் அந்தப்
பெண் சுணங்க, காத்திருந்த கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டனர்.
செல்போன் தொலைந்துபோனால்..?!
அந்தப் பெண்ணையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து நோட்டம்விட்ட அவன்,
அன்று அவர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றபோது அவருடைய செல்போனை
திருடிவிட்டான். வீட்டுக்கு வந்த அந்தப் பெண் மொபைல் காணாததைப் பார்த்து
தன் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்த அந்தத் திருடன், ‘மார்க்கெட்ல
கீழ கிடந்தது மேடம். போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலாம்னு போனேன். நல்லவேளை
நீங்களே கூப்பிட்டீங்க’ என்றவன், அவர் எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு
(!), ‘அந்தப் பக்கம்தான் இன்னிக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு. நானே வந்து
கொடுத்துடறேன்!’ என்றிருக்கிறான். அந்தப் பெண்ணின் கணவர், பிள்ளைகள்,
வேலைக்காரப் பெண் என்று அனைவரும் வெளியே கிளம்பி அவர் மட்டும் வீட்டில்
தனித்திருக்கும் நேரத்தை முன்கூட்டியே அறிந்தவன், அந்த நேரத்தில் சென்று
காலிங் பெல்லை அழுத்தினான். செல்போனை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி
சொல்லும்விதமாக அவனை வரவேற்று, காபி போட்டுவர அந்தப் பெண் கிச்சனுக்குச்
செல்ல, அந்த நொடியில் அவள் பின்னாலேயே சென்று கழுத்தில் கத்தி வைத்து,
பணம், நகையை கொள்ளையடித்துவிட்டான் அந்த கில்லாடித் திருடன்.
அதிர்ச்சி தரும் உண்மைச் சம்பவங்களாக அடுக்கிய வசந்தி,
‘‘எங்கு, எப்போது, எப்படி வில்லங்கம் நம்மைத் தேடி வரும் என்று தெரியாது.
எனவே, யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கையோடுதான் அணுக
வேண்டும்!’’ என்று அக்கறை பொங்கச் சொன்னார்!.