அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

வியாழன், 5 மார்ச், 2015

விருந்தாளி

விருந்தாளி
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......

அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்பக்கூடியவர்கள் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும் என்ற ஒரு பொன்மொழி உண்டு.

கலீபாக்கள் என்று அழைக்கப்பட்ட இஸ்லாமிய அரசர்களில் சிறந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்பவர். இவர் மிகவும் தூய்மையும் , இறைபக்தியும் கொண்டவர். இவரது ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்  வாழ்ந்தார்கள். நீதியும், நேர்மையும் மிக்க இம்மன்னர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஒரு முறை இவரிடம் விருந்தாளியாக ஒருவர் வந்தார். அவரை மன்னர் மிகவும் அன்புடன் வரவேற்று விருந்து படைத்தார். இருவருமாக அமர்ந்து உண்ணும் பொழுது , எண்ணெய் தீர்ந்துவிட்டதால், விளக்கு அணைந்து விட்டது.  ''அரசரே! நான் போய் விளக்குக் எண்ணெய் எடுத்து வருகிறேன் '' என்று வேண்டினார் விருந்தாளி.  ''வேண்டாம், நானே சென்று எண்ணெய் கொண்டு வருகிறேன்'' என்று சொல்லிக் கொண்டு எழுந்தார் மன்னர்.


''தாங்கள் எழுந்திருக்க வேண்டாம் அதோ அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறானே பணியாள் . அவனை எழுப்புகிறேன். அவன்போய் எண்ணெய் கொண்டு வரட்டும் என்றார் விருந்தாளி. மன்னர் புன்னகையை இதழில் பூத்த வண்ணம் ''வேண்டாம் , வேண்டாம். வேலையாளை எழுப்ப வேண்டாம். அவன் இப்பொழுதுதான் படுத்தான். கடுமையாகப் பகலில் உழைத்தவன் அவனுக்குத் தூக்கம் இப்பொழுதுதான் பிடித்திருக்கிறது. அதைக் கலைக்க வேண்டாம்'' என்று கூறிவிட்டு தானே எழுந்து சென்று , எண்ணெய் புட்டியை எடுத்து வந்து, விளக்கிற்கு ஊற்றி, விளக்கை எரியச் செய்தார்.

''மக்கள் தலைவரான தாங்கள் போய் இப்பணிகளைச் செய்ய வேண்டுமா? என்று பணிவோடு கேட்டார் விருந்தாளி. ''அதனால் என்ன? எண்ணெய் எடுக்கச் சென்ற போதும் உமராக இருந்தேன். விருந்தாளியை வேலை வாங்குவது மனிதத் தன்மை அல்ல'' என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அம்மன்னர்.

சிந்தித்துப் பாருங்கள். ஒரு சாதாரண விருந்தாளிக்கு மன்னர் கொடுத்த மரியாதை எப்படிப்பட்டது?  இத்தகு மனிதநேயம் அவருக்கு இஸ்லாம் கற்பித்ததே!  விருந்தாளிகளைப் பேணி, அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய இஸ்லாம் கட்டளையிடுகிறது. நாமும் விருந்தினரை பேணுவோமே !
நன்றி ..நர்கிஸ்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!