அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

சனி, 2 மே, 2015

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்


அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு
பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப்
படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை
ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான்
காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்)
தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின்
மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு
காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4291)


“உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்)
அழகாக்கிக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து
மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவுசெய்யப்படுகிறது. அவர்
செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே (ஒரு தீமையே) பதிவு
செய்யப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:
புகாரி 42)

“முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். (அவை:)
இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம் மற்றும் நீண்ட நாள் வாழ
வேண்டும் என்ற ஆசை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:
இப்னுமாஜா 4231)
“அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன்
மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம் 5049)

“ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்?‘
என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அந்த
அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும்
பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுஹிப்பான் 346)

இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்
நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும்
அதனைக் கடைப்பிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.
(அவ்விரண்டில் முதலாவது): ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் பத்து
முறை சுப்ஹானல்லாஹ் என்றும், பத்து முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், பத்து
முறை அல்லாஹு அக்பர் என்றும் கூற வேண்டும். இவ்வாறு (ஒரு நாளின் ஐவேளைத்
தொழுகைக்கும் சேர்த்து, (5 x 30)) நூற்று ஐம்பது முறை கூறுவதானது மறுமைத்
தராசில் ஆயிரத்தி ஐநூறு நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன.
(அவற்றில் இரண்டாவது:) படுக்கையில் (இரவில்) தூங்கும் முன், முப்பத்தி
நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும், முப்பத்தி மூன்று முறை
அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்தி மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும்
கூறவேண்டும். இவ்வாறு கூறும் (34+33+33) நூறு திக்ர்களானது மறுமைத்
தராசில் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன” என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை விரல்களால் (திக்ர்
செய்து) எண்ணியதையும் நான் பார்த்தேன். (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இவ்வாறு கூறியதைக் கேட்டதும், அவர்களிடம்) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே!
இவ்விரண்டும் மிக எளிதாக இருந்தும் அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக்
குறைவாக உள்ளனர்?” என்று கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள், “உங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது, இதனைக் கூறுவதற்கு
முன்னராகவே ஷைத்தான் அவரை உறங்க வைத்து விடுகிறான். அதுபோல் அவர் தொழுது
கொண்டிருக்கும் போதே அவரிடம் அவன் (ஷைத்தான்) வந்து இதனைக் கூறுவதற்கு
முன்னரே வேலைகளை நினைவூட்டி (எழுந்திருக்கச் செய்து) விடுகிறான்” என்று
பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: அபூதாவூத் 4406)

“உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப்
பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள்
குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா
ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5671)
Thanks:M.Fathima.blogspot.com